சிம்ரனின் முடிவு சரியா?
எந்த ரூட்டில் போனாலும் அங்கும் ஒரு முட்டுக்கல் இருக்கிறதே என்று கவலைப்படுகிற மாதிரி ஆகிவிட்டது சிம்ரனின் நிலைமை. கல்யாணம் செய்து கொண்டாலும் சொந்த ஊரை விட்டுவிட்டு சென்னையை நம்பி வந்தார் அவர்.
வந்த இடத்தில் இவர் நினைத்த மாதிரி ஒரு சினிமா வாய்ப்பும் வரவில்லை. டி.வி சீரியல் தயாரிக்கலாம் என்று முன்னணி சேனல் ஒன்றில் ஸ்லாட் கேட்டாராம். நீங்களே நடித்தால் ஸ்லாட் தருகிறோம் என்று அவர்கள் கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்.
அதற்குள் சீரியலுக்கு போவதா? மீண்டும் சினிமாவில் முயன்று பார்த்துவிட்டு அப்புறம் முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறாராம். இடையில் ஒரு படத்தை தயாரிக்கும் எண்ணமும் வந்திருக்கிறது அவருக்கு. பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் படத் தயாரிப்பில் இறங்கி படாத பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இவருக்கு எதற்கு வேண்டாத வேலை என்று கவலைப்படுகிறார்கள் சிலர். அது சிம்ரன் காதில் விழாமல் போயிருப்பதுதான் துரதிருஷ்டம்.
துள்ளிக்குதிக்கும் விமல்
அவ்வளவு பெரிய நடிகர் விக்ரம் நடிக்கும் தெய்வ திருமகன் படத்தை வாங்க எந்த ஏரியாவிலிருந்தும் யாரும் முன் வரவில்லையாம். ஆனால் விமல் நடித்த எத்தன் படம் அத்தனை ஏரியாவிலும் விற்று தீர்ந்துவிட்டது. இதை கேள்விப்பட்ட விமல், சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம்.
தனது படம் சோல்டு அவுட் என்பதை விட, விக்ரம் படத்தை விடவும் தன் படம் உடனே விற்கிறது என்ற சந்தோஷம்தான் அவருக்கு அதிகமாகியிருக்கிறதாம். மே 27 ந் தேதி திரைக்கு வரப்போகும் எத்தன் படத்தை தொடர்ந்து களவாணி சற்குணம் நடித்த வாகை சூட வாதான் விமலின் அடுத்த படம்.
அதற்கும் இப்போதே விநியோகஸ்தர் வட்டாரத்தில் நல்ல மதிப்பு இருப்பதால், வெகு சீக்கிரம் முன்னணி இடத்திற்கு வந்துவிடுவேன் என்று வெற்றி சிரிப்பு சிரிக்கிறாராம் விமல். சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை என்பது அவருக்கு தெரிய இன்னும் கொஞ்சம் நாளாகும்.
அவன் இவனில் மேலும் ஒரு பாட்டு
அவன் இவன் படத்திற்காக ஐந்து பாடல்களை உருவாக்கிக் கொடுத்தார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை சேர்ப்புக்காக வரும் போது பார்த்த யுவனுக்கு அதிர்ச்சி. படத்தில் பாடல்களே இல்லை. இப்படி ஒரு செய்தியை நாம் முன்பே எழுதியிருந்தோம்.
இந்த லட்சணத்தில் மேலும் ஒரு புதிய பாடல் கம்போஸ் செய்து தர வேண்டும் என்று கேட்டாராம் பாலா. அவரிடம், போட்டுக் கொடுத்த பாடல்களே படத்தில் வரல. அதுக்கப்புறமும் ஒரு பாட்டை எப்படி போட்டுத்தர முடியும் என்று கேட்கிற அளவுக்கு யுவனுக்கு தைரியம் இல்லை. ஆனால் தயாரிப்பு நிர்வாகியிடம் புலம்பினாராம்.
இதை கேள்விப்பட்ட பாலா, உன் பாட்டு இரண்டை படத்தில் பயன்படுத்திக் கொள்வேன். பேசாம நான் சொன்னதை செய்து கொடு என்றாராம் யுவனிடம். அதன் பின்பு ஒரு பாடலை தனியாக கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறாராம் யுவன்.
சிரிப்பு மூட்டிய பரத்
தனது நிலையை எந்த ஹீரோவும் உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை. இவர்கள் கேட்கிற சம்பளத்திற்கும், சம்பந்தப்பட்ட படத்தின் வியாபாரத்திற்கும் துளி கூட சம்பந்தம் இருப்பதில்லை. இவர்களை எப்படி திருத்துவது என்று விழி பிதுங்கி போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
முன்னணி இயக்குனர்கள் தைரியமாக புதிய முகங்களை களமிறக்கினால்தான் உண்டு என்று புலம்புகிறார்கள் அவர்கள். சமீபத்தில் நாம் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது. நடிகர் பரத்திடம் கால்ஷீட் போனார் ஒரு தயாரிப்பாளர். எண்பது லட்சம் சம்பளம்.
படத்தின் பட்ஜெட் ஆறு கோடிக்கு குறையாமல் இருக்கணும் என்றாராம் அவர். நிஜத்தில் இவர் நடித்த யுவன் யுவதி படம் முடிந்து காப்பி தயாராகிவிட்டது. இன்று வரை ஒரு ஏரியாவிற்கு கூட விலை கேட்டு ஆள் வரவில்லையாம். திருத்தணிக்கும் அதே நிலைமைதான்.
உண்மை இப்படியிருக்க ஆறு கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று இவர் கண்டிஷன் போடுவதை கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருது என்றார் அந்த தயாரிப்பாளர். சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தா சரி.
தொடரும் பகை
நல்ல நண்பர்களாக இருந்த சிம்புவும் ஜீவாவும் இப்போதெல்லாம் அதிகம் பேசிக் கொள்வதில்லை. அதற்கு காரணம் கோ திரைப்படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய வேடத்தை ஜீவா பறித்துக் கொண்டார் என்பதற்காக மட்டுமல்ல.
அதே மாதிரி இன்னொரு படத்திலும் கை வைத்துவிட்டாரே என்பதுதான். நண்பன் படத்தில் முதலில் சிம்புவிடம்தான் பேசியிருந்தாராம் ஷங்கர். அப்புறம் என்ன காரணத்தாலோ சிம்பு இல்லை. சொல்லி வைத்தாற் போல அந்த கேரக்டர் மிக சரியாக ஜீவாவிடம் வந்து சேர்ந்தது.
அது போதாதா? கடும் கோபம் வந்துவிட்டதாம் சிம்புவுக்கு. வானம் படத்திற்கு நிறைய சிக்கல்கள் இருந்த போதிலும், கோ படத்தை முறியடிப்பது மாதிரி இந்த படம் வந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் தனது அப்பாவிடம்.
ரிலீஸ் விஷயத்தில் டி.ராஜேந்தரும் கை கொடுத்தது அப்புறம்தான். இப்போது ஜீவா நழுவினாலும் அவரை சீண்டுவது போல பேஸ் புக்கில் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.
No comments:
Post a Comment